புதிதாக யாரிடமாவது சித்த மருத்துவம் பற்றியோ, குறிப்பிட்ட ஒரு பிரச்சினைக்குச் சித்தத்தில் நல்ல மருந்து இருக்கிறது என்றோ சொன்னால், உடனடியாக அவர்களுடைய எதிர்வினை என்னவாக இருக்குமென்று நினைக்கிறீர்கள்? படித்தவர் முதல் பாமரர்வரை உடனடியாக வேதியியல் பேராசிரியர்போல மாறி ‘அதில் மெட்டல் கலக்கிறார்களே. அதெல்லாம் சரிதானா என யோசிப்பார்கள். மக்களிடையே நீண்ட நாட்களாக நிலவிவரும் இந்த மூடநம்பிக்கை தற்போது வேறொரு தளத்துக்குச் சென்றுவிட்டது.
மருத்துவர் யார்?
‘சித்த மருந்துகளில் மெர்குரி கலந்திருக்கிறது' என்றொரு சர்ச்சைக்குரிய செய்தி ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மூலம் சமீபகாலமாக வலம் வந்துகொண்டிருக்கிறது. நாளிதழ் ஒன்றிலும் அந்தச் செய்தி வெளியாகியுள்ளது. இதற்குப் பின்னூட்டமாக ‘சித்த மருந்துகள் எதுவும் தரநிர்ணயம் செய்யப்படாதவை' என்பது போன்ற அவதூறுகளும் வேகமாகப் பரவி வருகின்றன.
மருத்துவ முறை வழிகாட்டுதலின்படி ஒரு நோயாளியின் சிகிச்சை அறிக்கையின் அடிப்படையில், மருந்துகளால் ஏற்படும் எந்த ஒரு பின்விளைவும் முறையாகப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை (Pharmacovigilance) எடுக்கப்பட வேண்டும். இது சித்த மருத்துவத்துக்கும் பொருந்தும். அந்த வகையில் சர்ச்சைக்குரிய சம்பவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவர், அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவப் பட்டத்தைப் பெற்ற சித்த மருத்துவராகவோ, பாரம்பரியச் சித்த மருத்துவராகவோ தெரியவில்லை. அந்த மருத்துவரின் தகுதி குறித்து முறைப்படி விசாரணை நடத்தப்பட்டதாகவும் தெரியவில்லை. அப்படியிருக்கும்போது, மருந்துகளைப் பரிந்துரைக்கத் தகுதி இல்லாத போலி மருத்துவர் ஒருவர் செய்த தவறுக்கு, ஒட்டுமொத்த சித்த மருத்துவத் துறையையே நம்பிக்கையற்ற ஒன்றாக ஊடகங்களில் சித்தரிக்கும் போக்கு வருத்தம் தரும் அதேநேரம், கண்டிக்கத்தக்கதும்கூட.
வேர், மூலிகை
அந்தச் சர்ச்சையில் குறிப்பிட்டுள்ள மிகவும் தவறான பொய்ச் செய்தி, ‘எல்லாச் சித்த மருந்துகளும் செய்து முடித்த பின்னர் மெர்குரியை (பாதரசத்தை) கலந்து தருகிறார்கள்' என்பதுதான். அப்படி ஒரு வழக்கம் எந்தச் சித்த மருத்துவச் செய்முறையிலும் கிடையாது. பொதுவாகவே சித்த மருந்துகளில் கனிமங்களின் பயன்பாடு மிகவும் சொற்பம். அப்படியே இருந்தாலும் முக்கிய, நாட்பட்ட, பிற மூலிகைகளால் குணப்படுத்த இயலாத நோய்களுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படும் உயர் சித்த மருந்துகளில் மட்டும்தான் உள்ளது.
"வேர்பாரு தழைபாரு, மிஞ்சினக்கால் பற்ப செந்தூரம் பாரே"- என்பதுதான் சித்த மருத்துவத்தின் அடிப்படை இலக்கணம். அதன்படி வேர், மூலிகைகள் ஆகியவற்றைக்கொண்டு ஒரு நோயைத் தீர்க்க இயலாதபட்சத்தில் கடைசிப் பெருமருந்தாக மட்டுமே உப்புகளை, கனிமங்களைக் கொண்டு செய்யப்பட்ட மருந்துகளைச் சித்த மருத்துவர்கள் பயன்படுத்துகிறார்கள். மேற்கண்ட சம்பவத்தில் கூறப்பட்டுள்ளதுபோல், மருந்துகளைச் செய்துமுடித்துவிட்டு ஒருபோதும் கனிமங்கள் கலக்கப்படுவதில்லை. அதற்கான அவசியமும் இல்லை. மாறாக, ஒரு சில உயர் மருந்துகளில் மருத்துவ மூலப்பொருளாக மட்டுமே சில கனிமங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
கனிம உருமாற்றம்
சித்த மருத்துவம் மட்டுமில்லாமல் ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, ஏன் பெரும்பாலோர் நம்பும் நவீன மருத்துவத்திலும்கூட நேரடி கனிம - ரசாயன மூலப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டே சில மருந்துகளின் செய்முறைகள் தொடங்கப்படுகின்றன. அந்தந்த மருத்துவத் தொழில்நுட்ப வழிகாட்டுதலின்படி (National Pharmacopoeia / Formulary Guidance) கடைசியில் அம்மருந்துகள் முறைப்படியான மருந்து வடிவத்தை வந்தடைகின்றன. கடைசியாகப் பயனுக்குரிய மருந்தாக அது மாறும்போது, கனிம மூலக்கூறு வடிவில் இல்லாமல் உப்புகளாக, உடலுக்குத் தீங்கு செய்யாத வடிவத்துக்கு மாறியும் இருக்கும்.
பல்வேறு மூலிகைச் சாறுகளில் பல மணி நேரம் ஊற வைத்தும், பல நாட்கள் அரைத்தும், சாண வறட்டியில் புடமிட்டும்தான் இம்மாற்றம் நிகழ்த்தப்படுகிறது. நவீனத் தொழில்நுட்பத்தில் பல்லாயிரம் டிகிரி மிகை வெப்பத்திலும், பெரும் அழுத்தத்திலுமே நானோதுகள்களைப் பெற முடியும் என்றுள்ள நிலையில், 100 வறட்டிகளை வைத்துப் புடமிட்டு ஒரு உயர் கனிமத்தை நானோதுகள்களாகப் பெற்ற சித்த மருத்துவ நுட்பத்தை நவீன விஞ்ஞானம் இன்றைக்கும் மெய்சிலிர்த்துத்தான் பார்க்கிறது. இப்படிப்பட்ட நவீன நானோதுகள்களின் மருத்துவப் பயன்கள் ஏராளம்.