மனதின் ஓரத்தில் மண்டிக்கிடந்து, எப்போதாவது கிடைக்கும் அமைதிப் பொழுதுகளில் மட்டும் எழுந்து ஆர்ப்பரித்து, பெருமூச்சுவிடவைக்கும் பள்ளிப் பருவ நினைவுகள் இல்லாதவர்கள் இருக்க முடியாது. அந்த நினைவுகளில், வெறும் உறவுச் சிலாகிப்பு மட்டும் உறைந்திருப்பது இல்லை; பெரும் உயிர் வாழ்வியல் விதிகளும் வேர் விட்டிருக்கும்.
ஸ்கூலில் கிரகோரி வாத்தியாரின் முத்தமிழ் முழக்கம், ஸ்கூல் போகும் வழியில் விரசலாகக் கடந்துபோன கான்வென்ட் பெண்ணின் கடைக்கண் ஓட்டம், முதல் பந்திலேயே பிடிகொடுத்து வ.உ.சி மைதானத்தின் சுவர் ஏறிக் குதித்து ஓடிய அவமானம் மாதிரி, 35 வருடங்கள் தாண்டியும் மறக்க முடியாத ஒரு பொருள் உண்டு. அது இப்போது சந்தையில் உள்ளதா என எனக்குத் தெரியவில்லை. அது அப்பாவின் சவரத்துக்கான `அசோக் பிளேடு’.
கயிற்றின் ஒரு முனையை விரல்களுக்கு இடையில் பிடித்துக்கொண்டு, பம்பரத்தின் பருத்த வயிற்றில் ஆறாவது சுற்றை இறுக்கமாகச் சுற்றும்போது, `எவ்ளோ நேரமாக் கூப்பிடுறேன்.காதுல விழல?’ என்ற குரலுடன் பிடரியில் தட்டும் ஒரு சின்ன அடி அதிகம் வலிக்காது. ஆனால், மிக அதிகமான எரிச்சலைத் தரும். ஒரு ரூபாய் காசோடு அப்பா நின்றுகொண்டு, `போய்... சீக்கிரமா அசோக் பிளேடு வாங்கியா!’ என விரட்ட, ஞாயிறு காலைப் பொழுதில் எஸ்.ரமேஷுடன் ஆடும் பம்பர விளையாட்டு முறிந்துபோவதுதான் வலியைத் தாண்டிய எரிச்சலின் காரணம். அந்த பிளேடுக்கு அப்பாவின் தாடையைத் தாண்டி பல பயணம் உண்டு. அந்த அசோக் பிளேடை சவரக் கத்தியில் லாகவமாக மாட்டி, எப்போதோ வாங்கிய சவரச் சோப்புக்கட்டியை பழைய பிரஷ்ஷால் குழைத்து, ரசம் மங்கிப்போன கண்ணாடியை முன்வாசலில் அமர்ந்து சவரம்செய்யும் காட்சி, இன்னும் எனக்கு வரிமாறாத மனப்பாடக் கவிதை.
சவரத்துக்கு ஏற்றமாதிரி வாயைக் கோணலாக வைத்துக்கொண்டதால், `கல்லூரியில் படிக்கும்போது தாத்தா வாங்கித் தந்த சவர செட்றா!' எனப் பெருமிதமாக ஸ்பானிஷ் மொழியில் வந்துவிழும் அவரின் வார்த்தை ஒரு சின்ன இலக்கியம். `இந்த சோப்பாவது மாத்திட்டீங் களாப்பா?' எனக் குசும்பாகக் கேட்டதற்கு, எள்ளலைத் தாண்டிய முகாந்திரம் உண்டு. அந்தச் சவரக்கட்டியைக் குழைத்துக் குழைத்து, அது பாட்டியின் தடித்த வளையல் மாதிரி ஆகியிருக்கும். கடைசியில், சவரப்பெட்டியில் ஓரமாகக் கிடக்கும் படிகாரக் கட்டியை, முகத்தில் அவர் தடவுவது அப்போதைக்கு ஏதோ ஐதீகம் என்று மட்டுமே தெரியும். வாசக்காலில் கறுப்புக் கயிற்றில் பேய் விரட்ட கட்டப்பட்ட படிகாரக் கட்டியை முகத்தில் ஏன் தேய்க்கிறார்கள் என்ற பொருள் அப்போது விளங்காது. பெரும்பாலும் ஞாயிறு காலை மட்டும்தான் சவரத் திருவிழா நடக்கும். மெட்ராஸில் இருந்து பெரிய ஆபீஸர் வந்தால், திடீர் என நடுராத்திரியில் எப்போதாவது தனியாக உட்கார்ந்து அவர் திருத்திக்கொண்டிருப்பார்.
கூடையோ, கைப்பையோ இல்லாமல் கடைக்குள்ளேயே தள்ளுவண்டியில், வாங்கப் போகும் பொருளின் பட்டியலைத் துண்டுச் சீட்டில் எழுதி எடுத்துவராமல் மனதுக்குப் பிடித்தது, கம்பெனிக்காரன் புளுகு, கடைக்காரன் காட்டும் கவர்ச்சி என எல்லா கண்ணிகளிலும் சிக்கி, வாங்கி வண்டியில் குவித்து, அவற்றைத் தள்ளிக்கொண்டு வரும்போது, எதை நாம் மறப்போமோ... அதை கல்லாப்பெட்டியின் தலையில் தொங்கவிட்டிருக்கும் கார்ப்பரேட் வணிக உத்தியில், கடைசியாக 500 ரூபாய்க்கு மூன்று பிளேடுகள் வாங்கும்போது, அப்பாவின் அந்த ஒரு ரூபாய் அசோக் பிளேடு எனக்கு ஞாபகம் வரும்.
உயிர் பிழைக்கும் இந்தச் சவரச் சரித்திரத்துக்கும் என்ன சார் சம்பந்தம்? நிறைய உண்டு. அநேகமாக எட்டு முதல் ஒன்பது சவரத்துக்குப் பின்னர், அசோக் பிளேடு, முதலில் எங்கள் பென்சில் சீவும் ஆயுதம். பென்சில் சீவ வரும்போது, அது பென்சிலின் மரத்தைக் கூர் உடையாமல் அழகாக, வளைய வளையமாகச் சீவும் பொறுமையைக் கற்றுக்கொடுக்கும். அந்த வகுப்பு முடிந்த சில வாரங்களுக்குப் பின்னர், கடைசியாக சணல் கயிற்றில் கட்டப்பட்டு, அடுப்பங்கரையின் ஜன்னலோர ஆணியில் தொங்கவிடப்பட்டு சமையலுக்கு உதவிக்கொண்டிருக்கும். அத்தனை பயன்களையும் தொலைத்த இப்போதைய `யூஸ் அண்ட் த்ரோ’ சித்தாந்த பிளாஸ்டிக் பிளேடுகள் நம்மை மட்டும் சவரம்செய்யாமல், நம் பூமியையும் சவரம்செய்யும் பிளாஸ்டிக் குப்பையாக மட்டுமே குவிகின்றன.
`சோப்புக்கட்டியை எல்லாம் குழைத்து சவரம் செய்ய எவனுக்கு நேரம் இருக்கு; ம்ம்... அன்ஹைஜீனிக்?’ என ஆகிப்போனதில், சோப்புநுரையையே நேரடியாக புட்டியில் அடைத்து, வசதியாக வந்ததில் பெருமிதம் அடையும் நம்மில் பலருக்கு, அந்த நுரைக்குள், ஜெல்லுக்குள் பொதிந்திருக்கும் பல சங்கதிகள் தெரியாது.
வருஷம் 365 நாட்களும் சவரம்செய்தே ஆகவேண்டும். இல்லை என்றால், `ஒன்றா இரண்டா ஆசைகள்..?’ என நம் மனதுக்குப் பிடித்த பிள்ளை நம்மைச் சுற்றிச் சுற்றி வந்து பாட்டு படிக்காது; `அமெரிக்கா போறீங்களா அல்லது ஆஸ்திரேலியாவா... எந்த கிளையன்ட் ஸ்பாட்டுக்குப் போக உங்களுக்கு விருப்பம்?’ என நுனிநாக்கு ஆங்கிலத்தில், மனதுக்கு எப்போதுமே பிடிக்காத ஆபீஸர் அண்ணாத்தே நம்மைப் பார்த்து கேட்காது.
தினசரி ஜெல் உதவியில் நான்கு அடுக்கு பிளேடில் சவரம், நுரைத்துத் தள்ளும் ஷாம்பும் வழுக்கும் கண்டிஷனருடனுமான குளியல், முகத்துக்கு ஸ்க்ரப், அப்புறம் ஃபேஸ்வாஷ், உடலுக்கு பல்வேறு மணங்கள்கொண்ட சோப், குளித்த பின்னர் முடிக்கு ஜெல், முகத்துக்குப் பட்டிபார்த்து வார்னிஷ் அடிக்கும் பல அடுக்கு பவுடர் அலங்காரம், `அப்படிக்கா போனீங்கனாலே... அடுத்த கிரகப் பெண்கள்கூடப் பொங்கி எழுந்து வருவாங்க’ எனும் ஆணாதிக்க விளம்பரம் மூலம் விற்கப்படும் பூச்சிக்கொல்லி மணமூட்டிகள்... என இன்றைய தலைமுறையின் அலங்கார மணமூட்டிகள் முழுமையும் ரசாயன இம்மிகள். அவை தயாரிப்பிலும் பயன்படுத்தித் தூர எறிதலிலும்தான் ஒட்டுமொத்த பூமியின் மாபெரும் சூழல்சிதைவுகள் ஏகமாக நடந்துகொண்டிருக்கின்றன.
அன்டார்டிகாவின் பல கடற்கரைகளை, பனிமலைகளைக் காணவில்லை. `1870-ம் ஆண்டுக்குப் பிறகு 2015-ம் ஆண்டுக்குள் பூமியின் வெப்பம் இரண்டு டிகிரி கூடிப்போச்சு’ என்ற பாரிஸ் நகர சூழலியல் கருத்தரங்கின் கூச்சலுக்கு, அழகுப்பொருட்கள் உற்பத்திதான் முதல் காரணம். இந்த அழகூட்டிகள், பூமியின் சூட்டை மட்டும் கிளப்புவது இல்லை; உடம்பின் சூட்டையும் கிளப்புகின்றன. `கட்டுப் பாடற்ற அழற்சி' (Inflammation) எனும் உடல்சூட்டை இந்த வேதிப்பொருட்கள் கிளப்பிவிடுவது மறைக்கப்படும் உண்மை.
`அதெல்லாம் ஒன்றும் இல்லை. அதிகம் பயமுறுத்துகிறார்கள்’ என அவர்கள் தரப்பு அதிகாரவர்க்கத்துடன் சேர்ந்து கும்மியடித்தாலும், சில அறம்சார் அறிவியல் நிறுவனங்கள் விழுங்க முடியாமல் விக்கிக் கொண்டு, `அவ்வளவாக ஆராயவில்லைதான். குரங்குக்கும் எலிக்கும் ஆபத்து இல்லை என்பதால் மனுஷனுக்கு சூனியம் வைக்காது எனச் சொல்ல முடியாதுதான்’ என முனகுகின்றன. சத்தமாக அவர்கள் அறைகூவல்விட இன்னும் அரை நூற்றாண்டுகூட ஆகலாம்.
Phthalate (தாலேட்) என்பது, நகப்பூச்சு, பெரும்பாலான மணமூட்டி, சென்ட் வகையறாக்களில் பயன்படுத்தப்படும் ரசாயனம். மாதவிடாய் சீக்கிரமாகத் தொடங்குவதற்கும், மாதவிடாய் முடிவில் மார்பகப் புற்று தொற்று வதற்கும் ஈஸ்ட்ரோஜனைக் கூட்டிக்கொடுக்கும் பொருளாக `தாலேட்'கள் இருப்பதாக இப்போது தான் ஆய்வு உலகம் தன் மோவாய்க்கட்டையைத் தடவ ஆரம்பித்துள்ளது. முதல் பர்த்டேக்கு வாசலில் ஃப்ளெக்ஸ் போட்டு, பிள்ளையின் ஒவ்வொரு விரலுக்கும் ஒவ்வொரு கலரில் நெய்ல் பாலீஷ் போட்டு அழகு பார்க்கும் பணக்காரத் தந்தையும் சரி, திருமண வரவேற்பில் மனைவியை அழகாக்குகிறேன் என, காசைக் கொட்டிக் கொடுத்து முழுக் கோமாளியாக வேஷம்போட்டு மேடையில் நிறுத்தும் பரிதாபக் கணவனும் சரி... தாலேட்டுகளை இனியாவது கவனமாக உற்றுப்பாருங்கள்!
ட்ரைக்லோசான் (Triclosan) என்பது, கிருமிநாசினி சோப்புகள், டூத்பேஸ்ட் மற்றும் மணமூட்டிகளில் அழகு சாதனப் பொருட்களைத் தயாரிக்கும் கம்பெனிகள் அநிச்சையாகச் சேர்க்கும் ரசாயனம். உண்மையில், இது பூச்சிக் கொல்லி வகையறா. தைராய்டு கோளப்புற்றில் இருந்து ஆன்டிபாக்டீரியல் எதிர்தன்மை (உங்கள் டாக்டர் சரியாக எழுதித் தரும் ஆன்டிபயாட்டிக் கூட வேலைசெய்யாத நிலைமை) வரை இந்த ரசாயனமே உள்ளது.
1-4 டயாக்சான், இது பன்னாட்டுப் புற்றுக்காரணி பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ரசாயனப் பொருள். `இந்த வேதியை நேரடியாக அழகு சாதனப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் சேர்ப்பது இல்லை. ஆனால், நிறைய நாடுகளின் அழகூட்டிகளில் இது கலப்படமாக வருகிறது. குறிப்பாக, ஷாம்புகளில்; ஷேவிங் ஜெல்லில்' என்கிறது ஓர் ஆய்வு.
`சார் இந்தியாவில் எப்படி?’ எனக் கேட்காதீர்கள். விடையை உங்களால் ஊகிக்க முடியாதா என்ன? இதே மாதிரி 1-3 பியூட்டாடின் எனும் நேரடிப் புற்றுக்காரணி ஷேவிங் ஜெல்லில் இருக்கும். `ஜெல்லை நுகரும்போது அந்தப் புற்றுக்காரணி உள்ளே போனால் மட்டுமே உயிர் பிழை உருவாகலாம். மற்றபடி ஒன்றும் இல்லை’ என்கிறது ஆய்வு. இனி மூச்சைப் பிடித்துக்கொண்டோ அல்லது முகமூடி கட்டிக்கொண்டோதான் சவரம்செய்ய வேண்டும்போல!
பாரபென்கள் - அரையிடுக்கு அரிப்புக்குத் தடவும் களிம்பு முதல், ஆண்களின் வியர்வை நாற்றத்தை விரட்டி, ஜாம் பன், ஸ்ட்ராபெர்ரி, காபிக்கொட்டை வாசம் எல்லாம் தந்து வசப்படுத்தும் வசியப்பூச்சில் கண்டிப்பாக இது இருக்கும். இது எலியின் மார்பில் புற்று தருவதாக இப்போது பேசப்பட்டுவருகிறது. நாளை..?
ஷாம்பூ ஷேவிங் ஜெல்லில் அதில் சேர்க்கும் வேதிகளைச் சுத்தப்படுத்தப் பயன்படுத்தப்படுவது எத்திலீன் ஆக்ஸைடு எனும் பொருள். வேலை முடிந்ததும் வெளியேறாமல் அந்த ரசாயனத் திண்ணையில் சிறிய அளவு மட்டும் படுத்து உறங்கிவிடுமாம். அந்தச் சிறிய அளவிலான அழையா விருந்தாளி நேரடியான புற்றுக் காரணியாகி, சில மணி நேரத்தில் நம்மை உறங்கவேவிடாது என்கிறது நவீன அறிவியல்.
`ஏலேய்... இன்னைக்கு சனிக்கிழமை. காலையில் செட்டியார் கடை செக்கு நல்லெண்ணெய் தேய்த்து எண்ணெய் போற மாதிரி சீகைக்காய் போட்டுக் குளிக்கணும். ஆங்... சொல்லிப்புட்டேன்’ எனக் கூவும் குரலுக்குப் பின்னால் இந்த பாரபென்கள், எத்திலீன் ஆக்ஸைடு, டயாக்சின், தாலேட் என எதுவும் கிடையாது. பழைய பிளேடு சவரமும் சரி, நல்லெண்ணெய் சீகைக்காய்க் குளியலும் சரி அழகுதான் தந்தன. கூடவே கொசுறாக ஆரோக்கியமும் கிடைத்தது. சவரக்கட்டியும் ரசாயனம்தான், மழித்த பின் பயன்படுத்திய படிகாரத் துண்டும் ரசாயனம்தான். ஆனால், நிச்சயம் இன்றுபோல் ஆயிரத்து எட்டு வேதி இம்மிகள் நிறைந்து இருக்கவில்லை. ஆனால், `இந்த மாசம் ஏன் மூணு பிளேடு வாங்க வேண்டியதாயிடுச்சு?' என யோசிக்கும் அன்றைய தலைமுறையின் கவலையில், உயிர் பிழையில் இருந்து மண்ணுக்கும் மனிதனுக்கும் சேர்த்து காப்பு இருந்தது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை!
- உயிர்ப்போம்...