வாழ்வின் ஆதாரமான ‘ஆண்-பெண் உறவுகளுக்குள் மட்டும் ஏன் இத்தனை வேறுபாடுகள்? தொழில்நுட்பங்கள் வளர வளர, விரிசல்களும் வித்தியாசங்களும் ஏன் இவ்வளவு அதிகரிக்கின்றன? சரிசெய்யவேண்டியது எங்கே? நம் குழந்தைகளுக்கு, ஆண்-பெண் மனங்கள் எப்படி இயங்குகின்றன என்பதை எப்போது கற்றுக்கொடுக்கப்போகிறோம்? காதல், நட்பு, உறவு, பிரிவு... என ஆண்-பெண் இடையே இருக்கும் இந்த இணைப்பைப் பலப்படுத்தும் அந்த ஒன்று எது?' விடைகளுக்கான விகடனின் தேடலே இந்தத் தொடர். வாரம் ஒரு பிரபலம் தங்களுடைய வாழ்வின் வழியே, கற்றலின் வழியே வெளிச்சம் பாய்ச்சுகின்றனர்.
`உன்னை அடிக்க வந்தவன்ல யாராவது ஒருத்தன் உன்னைக் குத்திக் கொன்னுட மாட்டானானு காத்திருந்தேன்டா’ - சமீபத்தில் வெளியான `கொடி’ படத்தில் வந்த கூரான வசனம் இது. ஒரே துறையில், வெவ்வேறு தளத்தில் நேரடிப் போட்டியைச் சந்திக்கும் காதலர்களில்... காதலி, தன் காதலனைக் கொன்று வாழ்வில் முன்னேறும் யதார்த்தப் பயங்கரத்தைச் சித்திரிக்கும் காட்சி அது. `இந்தப் போட்டி உலகில் இன்றைய யதார்த்தம் இதுதானா?’ என்ற அகக் குரல், அன்றைய தீபாவளி இரவின் வெடிச்சத்தத்தைவிட படுபயங்கரமாக எனக்குள் கேட்டுக்கொண்டே இருந்தது.
குடும்ப மருத்துவராக பல நேரங்களில் மருத்துவத்தைத் தாண்டி, சிலரது மன அழுத்தங்களுக்கான வடிகாலாகவும் நான் இருப்பது உண்டு. அப்படிக் கடந்த சம்பவம் ஒன்றை, `கொடி’ திரைப்படத்தின் அந்த வசனம் என் மனதுக்கு எடுத்துக் கொடுத்தது.
வெள்ளை கவுன் தேவதைகள் சூழ, நான்கு ஆண்டு காதல்; அதன் பிறகு வெள்ளை வேட்டிக்காரர்கள் சூழ, ஆறு மாதங்கள் பெற்றோருடன் போராட்டம்; அப்புறம், வேட்டி சட்டை - கோட் சூட் - அக்கினி முதல் அம்மி வரை சூழ, விமர்சையான கல்யாணம்... இப்படித்தான் அவர்களும் காதல் முதல் கல்யாணம் வரை கடந்து வந்திருந்தார்கள். இப்போது அவர்கள் நீதிமன்ற வாசலில் கறுப்பு கோட்காரர்கள் சூழ விவாகரத்துக்குக் காத்திருக்கிறார்கள். காரணம், மிக எளிமையானது... ஈகோ.
`அவளுக்கு என் புரொஃபஷனல் வாழ்க்கை மீது அக்கறையே கிடையாது டாக்டர். `ஆன் சைட் போக வேணாம்’கிறா, `நைட் ஷிஃப்ட் போகாத’னு தடுக்குறா, `ஃப்ரெண்ட்ஸைப் பார்க்காத’ங்கிறா' என அந்தப் பையன் கதறுகிறான்.
`அவனுக்கு என் வளர்ச்சி பிடிக்கலை. எனக்குப் பின்னாடி ஐ.டி-க்கு வந்தவன், இப்போ டீம் லீடர் ஆகிட்டான். நான் அப்படியே தேங்கிட்டேன். அவனுக்குத் தேவை எல்லாம், ஆபீஸ்ல உழைச்சுக் கொட்டிட்டு, வியர்வை, புழுக்கத்தை எல்லாம் வெந்நீரில் கழுவிச் சுத்தமாக்கிட்டு, சென்ட் அடிச்சுக்கிட்டு படுக்கையில தயாராயிருக்க ஒரு பொம்பளை. புள்ளைக்குக் குண்டி கழுவிவிடும், முறுகலா தோசை சுட்டுக் கொடுத்து படுக்கையில் கை - கால் அமுக்கிவிடும் ஒரு வேலைக்காரி’ என அந்தப் பெண் குமுறுகிறாள்.
அவர்களுக்குள் ஒருவர் மீது ஒருவர் சுட்டிக்காட்ட நூறு, ஆயிரம் தவறுகள் இருந்தன. எல்லாமே திருமணத்துக்குப் பிறகு இருவரும் கண்டுபிடித்தவை.
`அவனோட குடும்பமே அப்படித்தான் டாக்டர். அந்தக் கூட்டத்தைப் பத்தி நமக்குத் தெரியாதா? ஏதோ படிச்சிருக்கானே திருந்தியிருப்பான்னு நினைச்சோம்’ எனக் கிடைத்த வாய்ப்பில் தன் ஆதிக்கச் சாதி பெருமை பேசியது பெண் குடும்பம். அப்போது மருத்துவத்தோடு சேர்த்து, அவர்கள் மண்டையில் ஓங்கிக் குட்ட வேண்டும்போல எனக்குத் தோன்றியது.
`ரோஜா கொடுத்து, கைபற்றி இதழ்களுக்குள் முன்னேறும்போது, இந்தக் காதலர்களுக்கு நைட் ஷிப்ட் சிக்கல்கள், முறுகல் தோசை, பிள்ளையின் கழுவாத குண்டி, ஆன் சைட் அவசரங்கள், பொருளாதாரச் சிக்கல்கள்... எல்லாம் தெரியாதா?’ என எனக்கு அடிக்கடி தோன்றும். காதல் 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுபோல் இன்று இல்லை. பெண்களை கல்வி நிறையவே மாற்றியிருக்கிறது. தன் மீது சுமத்தப்படும் அழுத்தங்களை அழுகையாகத் தலையணைக்குள் புதைத்தது போதும், விட்டு விடுதலையாகலாம் என்ற எழுச்சியை நகர்ப்புறப் பெண்களிடம் நிறையவே பார்க்க முடிகிறது. இது ஓர் ஆரோக்கியமான மாற்றம். ஆனால், அந்த எழுச்சியை ஆண்களால் எதிர்கொள்ள முடியவில்லை.
ஆனால் சில நேரங்களில், `எது தன் மீதான அழுத்தம், எது தனக்கான வெளி, எது தனக்கான விடுதலை?’ என்ற புரிதல் ஆண்-பெண் இருவருக்கும் இல்லாமல் போய்விடுகிறது. அந்த நேரத்தில் அன்பைப் புதைத்து, அதிகாரம் வளர்க்கும்போது திருமணம் எனும் கட்டுமானத்தின் அஸ்திவாரம், அநாயாசமாக அடித்து உடைக்கப்படுகிறது.
இன்றைய குழந்தைகள் தன்னந்தனியாகவே வளர்கிறார்கள். அவர்களுக்கு காதல், சிநேகம் பற்றி எல்லாம் கற்றுத்தர ஆட்களே இல்லை. இவற்றை எல்லாம் அரவணைத்துக் கற்றுத்தர என் பால்யத்தில் பலர் இருந்தனர். வெவ்வேறு வயதில் அவர்களே என்னை வளர்த்தெடுத்தனர். குடும்பமே கற்றுத்தரும். குறுக்கும் நெடுக்குமாக இருந்த பாளையங்கோட்டை தெருக்களும், சாத்தான்குளம் வீட்டுத் திண்ணை மாமாக்களும் சொல்லித்தருவார்கள். உறவுகளின் ஆழத்தை எனக்குள் விதைத்த கிரகோரி வாத்தியாரும், கல்லூரியில் சக்கரவர்த்தி அண்ணனும் இருந்தனர்.
பள்ளிக்காலத்தில், கோஎஜுக்கேஷனில் படிக்காவிட்டாலும், வளவு வீட்டில் 10 வருடங்களுக்கும் மேலாக வசித்த அனுபவம், சக பெண்ணின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவும் மதிக்கவும் உதவியது. டவுசர் பாக்கெட்டில் தேங்காய்ச் சில்லுகளை மறைத்துத் தின்கிற பையனாக வளவு வீட்டில் சுற்றித் திரிவேன். அங்கே ராஜி அக்காவும் உமா அக்காவும் அம்மாவோடு சேர்ந்து, ` `துணை’ படத்தில் சரிதா, சிவாஜியைக் கல்யாணம் பண்ணியிருக்கணும்; வயசு வித்தியாசம் இருந்தா என்னக்கா? சப்புன்னு முடிச்சுட்டார் டைரக்டர். பாலசந்தர்னா இப்படி முடிச்சிருக்க மாட்டார்’ என விவாதிப்பார்கள். அதில் பாதிதான் புரியும். இருந்தாலும், அது என் மனதின் ஓரத்தில், எது காதலுக்கான காம்பவுண்ட் சுவர், எது அந்தச் சுவரில் இருக்கும் சோடா பாட்டில் கண்ணாடி எனப் பலவற்றைச் சொல்லிக்கொடுத்தது. இன்றைய குழந்தைகளுக்கு உயிரற்றத் தொழில்நுட்பங்களே உறவுகளின் ஆசான்கள் ஆகிவிட்டன.
12-ம் வகுப்பு வரை தாவணிகளைப் பார்க்கும்போது எல்லாம் காதல் பொங்கும். ஊரில் தசரா கொண்டாட்டத்திலும், விகடனில் பட்டுக்கோட்டை பிரபாகரின் `தொட்டால் தொடரும்’ கதையிலும், தரை டிக்கெட் வாங்கிப் பார்க்கும், `மைதிலி என்னைக் காதலி’ படத்திலும்தான் தாவணிகளைத் தரிசிக்க முடியும். இப்படிப்பட்ட சூழலில் சித்தமருத்துவக் கல்லூரியில் ஆறு வருடங்கள் ஒரு பெண்ணோடு வகுப்பறைக்குள் பழக, பேச, வியக்க ஏராளமான சந்தர்ப்பங்களையும் சேர்த்து என் கல்லூரிப் படிப்புதான் தந்தது. அப்படிக் கிடைத்தவள்தான் என் ராஜி.
என் காதலுக்கு முதலில் பச்சைக்கொடி காட்டியவள் என் அம்மா. பல போராட்டங்களுக்கு மத்தியில் எங்கள் திருமணம் நடக்கவும் அவள்தான் காரணமாக இருந்தாள். ஆனால், ராஜி வீட்டில் அப்படி அல்ல. ராஜி என் மீதுகொண்ட காதலுக்காக தன் குடும்பத்தை மட்டும் அல்ல, தன் சாதிக்கும் ஊருக்கும் எதிராக அவள் மிகப்பெரிய எதிர்ப்பைக் காட்டவேண்டியிருந்தது. அவளது கிராமத்தில், குடும்பத்தில் முதன்முதலில் படிக்க வந்த பெண் ராஜி. தமிழ் சினிமாவைத் தாண்டி கிராமம், பஞ்சாயத்து, ஊர்க்கட்டுப்பாடு, தலையாரி... என எதுவும் எனக்குத் தெரியாது. எதிர்ப்புகள் கண்டு நிறையவே வெலவெலத்துப் போனேன். அப்போது எனக்குத் தைரியம் சொன்னவள் ராஜிதான். என்னைத் திருமணம் செய்யும் அவளின் முடிவுக்கு எதிராக, கிராமமே கொதித்தெழுந்தது. அவள், தன் கண்ணீரைக்கூட நிறுத்திவைத்துக்கொண்டு, `இவன்தான் எனக்கானவன். இவனைத்தான் நான் கல்யாணம் செய்துகொள்வேன்’ எனச் சொல்லி இறுதி வரை உறுதியாக நின்றாள். ஆனால், காதலின் வெற்றி, திருமணத்தில்தான் இருக்கிறதா? உண்மையில், திருமணத்துக்குப் பிறகான ஆயிரமாயிரம் சவால்களில்தான் இருக்கிறது என்பதையும், எனக்கு உணர்த்தியவளும் ராஜிதான்.
என் குழந்தைக்கு உயிரைக் குடிக்கும் வலிமையான நோய் ஒன்று வந்திருந்தது. என் வசதிக்கு மீறிய மருத்துவமனைக் கதவைத்தான் முதலில் தட்டினேன்.
`இவ்வளவு கடனும் கஷ்டமும் பட்டு பெண் குழந்தையைக் காப்பாத்தணுமா, பேசாமல் விட்டுவிடுங்களேன்’ என உறவுகளும் சிறப்பு மருத்துவரும்கூடச் சொன்னார்கள். வறுமையில், அடுத்து என்ன செய்வது என்பது புரியாமல் உருக்குலைந்துபோய், குழப்பமான மனநிலையோடு நின்றேன். முன்பு, `என் காதல் கைகூடாதோ’ என எப்படி அச்சத்தில் உறைந்துபோய் நின்றேனோ... அதே கையறுநிலை. இப்போதும் ராஜிதான் எனக்கான நம்பிக்கையாக உயர்ந்து நின்றாள். அழுது வீங்கிய கண்களுடன் உறுதியாக, ‘நாம வேலூருக்குப் போயிடலாம். அங்கே பொதுப்பிரிவில் வைத்து முயற்சிபண்ணலாம். வசதி குறைச்சலா இருந்தாலும் காப்பாத்தலாம் சிவா...’ என என்னை விரட்டினாள். வேலூரில் முழுதாக ஒரு வருடம், பொதுப்பிரிவில் கண் விழித்துக் காத்திருந்தாள். என் துயரங்களை எல்லாம் பகிர்ந்துகொண்டாள். மகளை, எமனிடம் இருந்து மீட்டு வந்தாள்.
ஆண் ஏதோ செவ்வாய்க்கிரகத்தில் இருந்தும்... பெண், வெள்ளிக்கிரகத்தில் இருந்தும் வந்தவர்கள் அல்ல. இருவரும் பெண்ணின் வலி நிறைந்த வாசலில் இருந்து வந்தவர்கள்தான். இதை அறம்சார் எழுத்தும் அறம் நோக்கும் கல்வியும் அறம் நிறைந்த குடும்பமும் மட்டுமே நமக்கு உணர்த்த முடியும். எனக்கு பெண்களைப் பற்றிய பல புரிதல்களை உருவாக்கியது என் வீடுதான்; என் அம்மாவும் தங்கையும்தான்.
நான் பாளையங்கோட்டையில் சித்தமருத்துவம் படிக்கும்போது, என் தங்கைக்கு கிள்ளிகுளம் விவசாயக் கல்லூரியில் இடம் கிடைத்தது. கல்லூரியில் சேர்ந்த இரண்டாம் மாதம், தன் இடுப்பு வரை வளர்ந்திருந்த முடியை வெட்டி, `பாய் கட்' அடித்துவிட்டு வீட்டுக்கு வந்தாள். வீடு அல்லோலகல்லோலப்பட்டது. வழக்கமாக இரவு நேரத்தில் ஆபீஸில் இருந்து சைக்கிளில் வரும் அப்பா, அன்றைய தினம் சுற்றமும் நட்பும் சூழ ஜீப்பில் வந்து இறங்கினார். `என்னாச்சு ஜெயந்திக்கு, ஏன் முடியை வெட்டிட்டா, இந்திராவே படிச்சத் திமிரு உள்ளவ. அவ புள்ள எப்படி இருக்கும்?’ என்ற உறவுகளின் உறுமலில் நானும் கலந்திருந்தேன்.
`முன்பு கான்வென்ட் ஸ்கூலில் முடிவெட்ட அனுமதி இல்லை. இப்ப வாய்ப்பு இருக்கு. எனக்குப் பிடிக்காத மயிரை நான் தொலைப்பதில் உங்க எல்லாருக்கும் என்ன வந்தது?’ என ஜெயந்தி கோபமாகக் கேட்டாள். அவளுக்கு ஆதரவாக நின்ற ஒரே குரல், என் அம்மா இந்திராவுடையது மட்டுமே. அப்பா அதிகம் பேசவில்லை. ஆனால், அவரது கோபம்... `எனக்கு மோர்சாதம் வேண்டாம்’ என தட்டை அங்கணாக்குழியில் விட்டு எறிந்ததில் வெளிப்பட்டது.
இரவில் வாசல் நடையில் உட்கார்ந்து, நிலா பார்த்தபடி பேசினாள் அம்மா... ‘ஹாஸ்டல்ல இருக்காடா. அவ்ளோ நீளமான முடியைப் பராமரிக்கிறது கஷ்டம். அதோடு அவளுக்கு அழகா இருக்கு. இந்திரா காந்திகூட இப்படித்தான் இருக்கா. நான் சிலோன்ல படிக்கும்போது எவ்ளோ பேர் பாய்கட் பண்ணியிருந்தாங்க தெரியுமா?’ என என்னைச் சமாதானப் படுத்தினாள். அம்மாவால் ஜெயந்தியின் செயலை ஏற்றுக்கொள்ளவைத்தது எது என, அப்போது எனக்குத் தெரியவில்லை. இப்போது புரிகிறது... அது, அம்மா 60-களில் கற்ற கல்வி.
ஜெயந்தி முடி வெட்டியது என் ஆணாதிக்கச் சிந்தையைக் கொஞ்சமாக வெட்டி, பெண்கள் உலகைப் புரிந்துகொள்ள முயன்ற முதல் நிகழ்வாக இருந்தது. `பொம்பளை படிச்சாப்போச்சு' என இன்னும் சொல்லித் திரியும், ஜெயித்த ட்ரம்ப் முதல் ஜெயிக்காத ட்ரம்பெட்கள் வரை பார்க்கும்போது எல்லாம், ஒருவேளை வடக்கே மகாத்மா ஜோதிராவ் பூலே முதல் தெற்கே செ.தெ.நாயகம் வரை, பெண்ணுக்கு என கல்வியைத் தர அயராது உழைத்தவர்கள் இல்லாமல் போயிருந்தால் பெண்களின் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும் என்றே தோன்றும்.
அம்மா, பெண்களுக்குச் சட்டை தைத்துக் கொடுத்துச் சம்பாதித்தாள். அதைக் கொண்டுதான் 20-ம் தேதிக்குப் பிறகும் வீட்டுக்குத் தேவைப்படும் காபித்தூள், சர்க்கரை வாங்கினாள். அப்புறம் அப்பாவுக்குத் தெரியாமல் தீபாவளிக்கு ஷிபான் சேலை, தங்கச்சிக்கு எண்டைஸில் வாங்கிய துணியில், பூர்ணிமா ஜெயராமன் போடும் மிடி, எனக்கு ஸ்டார் டெய்லரில் பேகி பேன்ட்... போன்றவற்றையும்கூட அந்தத் தையல் சம்பாத்தியத்தில் சமாளித்தாள்.
அம்மா தைத்த சட்டையை வீடு வீடாகக் கொண்டுபோய்க் கொடுத்து, கூலியாக `இரண்டு ரூபா அம்பது காசு’ வாங்கி வருவேன். கொஞ்சம் பெரிய பையன் ஆனபோது, `பொம்பளைங்க சட்டையை நான் எப்படி எடுத்துட்டுப் போறது? கிண்டல் பண்ணுவாங்கம்மா. நான் போக மாட்டேன்’ எனச் சண்டை கட்டுவேன்.
`உனக்கு நான் ஜட்டி துவைச்சுப் போடலை. இதை கையில் பிடிச்சுக்கிட்டுப் போய் கொடுக்க என்ன வெட்கம்? உன் டவுசர் பனியன் மாதிரி இது பெண்களோட சட்டை. அதுல என்ன அசிங்கம், அவமானம்? அலமாரியில் என் பிளவுஸ் பக்கத்தில்தானே உன் சட்டை இருக்கு? எல்லாத்துக்கும் மேல நேத்து வாங்கித் தின்னியே `பாரமவுன்ட் பால் ஐஸ்', அது கற்பகம் அக்காவோட சட்டைக் கூலி. ஐஸ் இனிக்குது. சட்டை வெலவெலக்குதோ?’ எனச் சீறிய அம்மாவின் கோபமான சொற்கள், இப்போதும் என் ஆண் முதுகுத்தோலை உரித்தபடிதான் இருக்கிறது. இதுபோல ஒவ்வொரு முறையும் ஆணாதிக்க மனோபாவம் எனக்குள் எழும்போது எல்லாம், தான் கற்ற கல்வியால், அறிவால் பெண் உடலுக்கான இயல்பை, எனக்குப் புரியவைத்தவள் அம்மாதான்.
பெண்ணின் ஆடையை முன்னிறுத்தி அவள் உடல் மீது அடிமைத்தனத்தை வக்கிரங்களைக் கட்டவிழ்ப்பதில் நேற்றைய `சங்க இலக்கிய ஆரவாரங்கள்’ முதல் இன்றைய `சங் பரிவாரங்கள்’ வரை அனைவரும் நடத்தும் அரசியல், அகம் சுளிக்கவைப்பவை. அன்றைய `மார்க்கச்சை’ முதல் இன்றைய `புடவை’ வரை அனைத்தும், அதைப் பயன்படுத்தும் பெண்களின் வசதிக்காக வடிவமைக்கப்பட்டது அல்ல. ஆண்களின் நுகர்ச்சி வசதிக்காகவும் அவர்களின் கிறக்கங்களுக்காகவும் பெண்களை மெனக்கிடவைத்தவை. இன்றைக்கும் பெண்களின் உள்ளாடைகளை சூரிய வெளிச்சத்தில் உலர்த்துவதைக் கண்டிக்கும் பெற்றோர் இருப்பது எவ்வளவு அவமானகரச் செயல்!
சானிடரி நாப்கினை, கடைக்காரர் அலமாரியில் இருந்து எடுத்துவரும்போதே மறைத்து, இன்னொரு கவரில் சுற்றிகொண்டுவருவதை இன்றும் கவனிக்கலாம். கருப்பைக்குள் கருமுட்டையாக நீயும் நானும் தங்கியிருந்த படுக்கைதானே மாதவிடாயாக வெளியேறுகிறது. அந்த அசௌகர்யத்தைக் கொஞ்சம் போக்க உதவும் இந்தப் பொருளை, எவ்வளவு பகட்டாக பெருமையோடு கொடுக்க வேண்டும். எல்லா ஆண்களும் அங்கு இருந்து வந்தவர்கள்தான் என்பதை என்றைக்கு நாம் சத்தமாகச் சொல்லப்போகிறோம்?
ஓமப்பொடியை, ஐஸ்க்ரீமை அழகாக உறையில் இடும்போது `உடைந்துவிடக் கூடாது, உருகிவிடக் கூடாது, மணம் விலகிவிடக் கூடாது’ என்ற நுகர்வுக் கண்ணோட்டம் மேலோங்கியிருக்கும். நம் பெண்களுக்கு பண்பாடு என்ற பெயரில் நாம் இதுவரைக்கும் கொடுத்த ஆடையும் அந்த உறைக்கு இணையானதே. `நுகர்வோர் மனம்’தான் இன்றைக்கும் `வயசுக்கு வந்துட்டாள்’ என 10 வயது சிறுமிக்கு அவசரமாக அவளுடைய கவுனைக் கழற்றிவிட்டு, பட்டுப்புடவையைச் சுற்றி ஒட்டுமொத்தக் கூட்டமும் சிரிப்பது. அவள் முகத்தில் தடவும் சந்தனம், நம் சமூகம் பெண் முகத்தில் தடவும் கரிப்பூச்சைத் தவிர வேறு இல்லை.
`உன் நுகர்வுப்பொருள் தயார்’ என அவளை அலங்கரித்து, ரோடு எல்லாம் ஃப்ளெக்ஸ் பேனர் கட்டி, அதை வாட்ஸ்அப்பில் பகிர்ந்து, பெண்ணைச் சீரழிக்கும் கலாசார எச்சம், படித்த குடும்பத்திலும் இன்னும் தொடர்வது ஏன்? என் தங்கை இந்தக் கூத்துக்காக அன்றைக்கு அழுத அழுகை அத்தனை பெரியது. அப்படி ஒரு சங்கடச் சடங்கை, என் மகளுக்குத் தவிர்க்க, என் வீட்டுக்கு 20 வருடங்கள் பிடித்தது.
பெண்ணின் உடை முதல் உள்ளம் வரை, நல்ல புரிதலை சமூகத்தில் உணர்த்தவேண்டிய முதல் பொறுப்பு குடும்பத்துக்கு, குறிப்பாகப் பெற்றோருக்கே உண்டு. `தம்பி சாப்பிடட்டும். அதுக்கு அப்புறம் நீ தட்டு போடு’ என, பெண்ணைப் பசியோடு காத்திருக்கவைக்கிற சிறிய பாகுபாட்டில்தான், சீதையின் தீக்குளியல் முதல் நிருபமாவின் வன்புணர்ச்சி வரை கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.
ஓர் அதிகாலை. அமெரிக்காவில் இருந்து எனக்கு வந்த தொலைபேசி அழைப்பில், `அண்ணே... கொஞ்சம் பொறுமையாக் கேளு. நாங்க பிரிஞ்சுடலாம்னு இருக்கோம். பிறகு விளக்கமா சொல்றேன்’ என்று கரகரப்பான குரலில் சொன்னாள் என் தங்கை. அழுகை இல்லாமல் அவள் சொன்ன அந்தச் சொற்கள், ஒரு மிகப்பெரிய பூகம்பத்தைக் குடும்பத்தில் வெடிக்கச் செய்தது.
மிக நேர்த்தியாக, எந்தக் குறைகளும் இல்லாமல், இருவரும் திருமணத்தை முறித்துக்கொண்டார்கள். அதுவரை விவாகரத்தையே பார்த்திடாத எங்கள் குடும்பம் பொங்கி விம்மியது. நிறையவே படித்திருந்த என் தங்கையின் முடிவில் எரிச்சல் அடைந்தவர்கள், `அவ அம்மாவே மெத்தப் படிச்சவ’ என, அன்று ஜெயந்தி முடிவெட்டியபோது பேசிய அதே சொற்களை இப்போதும் சொன்னார்கள். அப்போதுபோலவே இப்போதும் என் தங்கையை அரவணைத்துக்கொண்டாள் அம்மா. இந்த அரவணைப்புக்கும் அவள் கற்ற கல்விதான் பக்கபலமாக இருந்தது.
அந்தக் காலத்தில் இலங்கைக்குக் கள்ளத்தோணியில் ஏறிப்போய், கடைப் பையனாக இருந்து, பிறகு சிறு வணிகராக மாறிய தாத்தாவின் ஒரே நோக்கம், பெற்ற ஒன்பது பிள்ளைகளையும் படிக்கவைப்பதுதான். அம்மாவைத் தவிர மற்ற எட்டு பேரும் முதுகலைப் பட்டதாரிகள். அம்மா மட்டும் இளங்கலைக் கணிதம். ஆனால், அவள் எந்தப் பணிக்கும் செல்லவில்லை. அன்று அவள் பெற்ற அந்தக் கல்விதான் இப்போதும் அவளுக்கு விசாலமான பார்வையைத் தருகிறது. ``அழுதோ, சிறைப்பட்டோ, அவமானம் தாங்கியோ, சப்பாத்திக்கு மாவு பிசைந்துகொண்டும் சரியாக அதிரசத்துக்கு மாவு கூட்டியுமே பெண் முடங்கிக்கிடக்கவேண்டியது இல்லை.
நீ வேலையைப் பார் ஜெயந்தி. உலகின் எந்த மூலையில் ஒரு சீனனோ, ஆப்பிரிக்கனோ உனக்குப் பிடித்தால் சொல் அல்லது திருமணம் செய்துவிட்டுச் சொல்’’ எனச் சொன்ன அம்மாதான் என் ஆதர்சம்.
இன்றைக்கும் மீண்டும் திருமணம் செய்துகொண்டு, கணவரோடும் இரண்டு குழந்தைகளோடும் ஒரு பேராசிரியராக அழகான வாழ்க்கையை ரசித்து வாழ்கிறாள் தங்கை. `ஆர்ட்டிக் கண்டத்தின் முடிவில், மைனஸ் 44 டிகிரி குளிர் இருக்கும், வானம் உலகத்தைத் தொடும் `அரோரா பொரியலிஸ்’ பார்க்கப்போகிறேன்... அதுவும் `தனியாக’ எனச் சொல்கிறாள். அதை நான் அம்மாவிடம் சொன்னபோது, அம்மாவின் முகத்தில் அரோரா பொரியலிஸ் தெரிந்தது.
சினிமாக்கள், விஷ வித்துக்களைப் பொழுதுக்கும் பரப்பி, ஆணாதிக்கத்தின் அடுத்த அத்தியாயத்தை செல்லுலாய்டு வித்தைகளின் மூலம் தொடர்ந்து விதைக்கின்றன. ஒரு பெண்ணைத் தொந்தரவு செய்வதால் மட்டுமே அவளுடைய நட்பையும் காதலையும் அடைந்துவிட முடியும் என, இப்போதுள்ள பையன்களுக்குப் போலியான நம்பிக்கையைக் கொடுக்கின்றன. இந்தப் பொய்கள் முறியடிக்கப்பட வேண்டும். அசலான நட்பையும் காதலையும் கற்றுக்கொடுக்கக்கூடிய கல்வியை உருவாக்க முன்வர வேண்டும். ஆண்-பெண் உறவுகள் குறித்து விசாலமான புரிதல் உள்ள குடும்பம் அவசியம். ஆண்பால் - பெண்பாலை அன்பால் இணைக்க, நாம் முதலில் தொடங்க வேண்டிய இடம் அதுதான்!