சின்னச்சின்ன அக்கறைகள், பல நேரங்களில் நம்மை பெரும் ஆபத்தில் இருந்து பாதுகாக்கும் என்பதை, நம் தமிழ்ச் சமூகம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பழகியிருந்தது. அந்த அக்கறைகளைப் பழக்கமாக்குவதற்கு, அவற்றை ஒழுக்கத்தின்கீழ் வகைப்படுத்திவைத்தது. சித்த மருத்துவக் கல்லூரியில் படித்த 18 - 19 வயதில், பாடத் திட்டத்தில் சிரிப்பாகவும் நகைப்பாகவும் தெரிந்த பல விஷயங்கள், இப்போது வியப்பாக இருக்கின்றன. அப்படியான விஷயங்களுள் ஒன்று, மலம் கழிப்பதும் அதன் பின்னர் சுத்தப்படுத்துவதும் குறித்து `பதார்த்த குண சிந்தாமணி' சொன்ன தகவல்கள்.
இன்றைக்கு திறந்தவெளி மலம் கழித்தலைத் தடுக்க, `ச்சீய்' என ஒரு விளம்பரம் மூலம் பல ஆயிரம் கோடி செலவில் மத்திய - மாநில அரசுகள் பொது சுகாதாரத்துக்கு முனைப்பெடுத்துவருகின்றன. அதன் நோக்கை சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நவீனக் கழிப்பறை தெரியாத நம் முன்னோர்கள் சூழல் அக்கறையுடன் செயல்படுத்தியிருந்தனர். பதார்த்த குண சிந்தாமணி நூல், `ஊருணி, ஆற்றுநீர், அருவி நீர், ஆற்றங்கரை, கேணி, இல்லம் என எவற்றின் அருகிலும் மலம் கழிக்காதே' எனச் சொல்கிறது. `ஒரு நாளைக்கு இருமுறை மலம் கழிப்பது ஆரோக்கியம்’ எனச் சொன்னது, உலகத்திலேயே தமிழ்ச் சமூகம் ஒன்றுதான்.
`இரு மலம், உடலின் மூன்று குற்றத்தைச் சரியாக வைத்திருக்கும்' என சூசகமாகப் பாடினார்கள் சித்தர்கள். உடலின் `மூன்று குற்றங்கள்' என்பது வள்ளுவன் பாடிய `மிகினுங் குறையினு நோய்செய்யு நூலோர் வளிமுதலா வெண்ணிய மூன்று' எனும் வளி, அழல், ஐயம் என்ற மூன்றைத்தான். `இந்த மூன்றும் கூடியும் குறைந்தும் நோய் வராமல் இருக்க வேண்டும் என்றால், இரு முறை மலம் கழித்தல் அவசியம்’ என்கிறது தமிழன் அறிவியல். மலம் கழித்த பின்னர் இடதுகையின் நடுவிரலால் ஐந்து முறையேனும் சுத்தம் செய்ய வேண்டும். அதற்கும் ஆரோக்கியமான நீரைப் பயன்படுத்த வேண்டும் என்பதை, நோயில்லா வாழ்வின் நெறியாகச் சொன்னது அந்தக் காலம். `வரும்போது போய்க்கோ' என்கிறது நவீன அட்டாச்டு டாய்லெட் காலம்.
மலக்கட்டு, சாதாரணமான விஷயம் அல்ல. வரும்போது வெளியேற்ற அது வாந்தியும் அல்ல. தினமும் வெளியேற்றப்பட வேண்டிய விஷயம். நாட்பட்ட மலக்கட்டு அல்லது இடையிடையே பேதியும் மலக்கட்டும் மாறி மாறி வருவது, மலவாயில் இருந்து வெளிவரும் சில துளி ரத்தம் போன்றவை பெரும்பாலும் மலச்சிக்கலின் வெளிப்பாடாகவோ, ஆசனவாயின் வெடிப்பாகவோ, மூலநோயாகவோ இருக்கக்கூடும். இந்த அறிகுறிகள் முதுமையில் ஏற்படுமானால் அதன் தாக்கம் இன்னும் அதிகமாகும்.
பெருங்குடல் மலக்குடல் புற்று, நெடுங்காலம் நம்மை அதிகம் சீண்டாத நோயாகத்தான் இருந்தது. யூதர்களில் சில பிரிவினருக்குத்தான் இந்த வகை புற்று அதிகம் வந்துகொண்டிருந்தது. மணமூட்டிகளும் வகை வகையான காய்கனிகளும் நிறைந்த நம் இந்திய உணவுகள், குறிப்பாக மஞ்சள் நிறைந்த உணவுகள் இந்தியனுக்கு அதிக எண்ணிக்கையில் மலக்குடல் புற்று வராதபடி காத்தன. நம் உணவு மரபு அறியாத வெளுத்த மைதா, கூவாத - பறக்காத - காலம் முழுக்க குத்தவைத்தே வளர்க்கப்படும் பிராய்லர் கோழிக்குழம்பு, இன்னும் ஏதேதோ ரசாயனத்தில் உப்பிய ரொட்டி, அதில் தடவப்படும் மாஞ்சா மாதிரியான பொருட்கள், பேரிடர் நிவாரணத்தைவிட வேகமாக வரும் பீட்சா இவை எல்லாமே ஏதோ ஒருவகையில் புற்று என்னும் பேரிடருக்கான காரணக் கூறுகளைக் கொண்டிருக்கின்றன. இவற்றை எல்லாம் தூவி, தடவி, மகிழும் நவீன மனிதன் இன்று கழிப்பறைக்குள் கலவரப்படுவதும், நாளை மருத்துவமனையில் கலவரப்படுவதும் சாத்தியம் என்கிறது நவீன மருத்துவம்.
மலக்குடல் புற்று என்பது, வழக்கில் பெருங்குடல் மற்றும் மலக்குடல் இரண்டிலும் ஏற்படும் புற்றைத்தான் குறிக்கும். பிற புற்றுக்கள்போல் மலக்குடல் புற்று பெரும்பாலும் வம்சாவழி மரபணுக்களால் வருவது இல்லை. `எப்பிஜெனடிக்ஸ்’ எனும் மரபணுவை நம் வாழ்வியலால் உரசி, உசுப்பேற்றுவதுதான் இங்கு அதிகமாம். அதனால்தான் நீண்ட மரபு, வரலாறு, இலக்கியம், கலாசாரம் இல்லாத வளர்ந்த நாடுகளில் இந்தப் புற்று இன்றும் அதிகம். `உணவு எனப்படுவது நிலத்தோடு நீரே' எனப் பேசி `யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உண்' என அறிவுறுத்தி, சாப்பிடவைத்து வளர்ந்த நம் போன்ற மரபு, வளர்ந்த நாடுகளில் இதுகாறும் கொஞ்சம் குறைவாக இருந்தது.