பிளேக் நோயைக் கண்டு நாம் பயந்துகொண்டுதான் இருந்தோம். அது வரலாற்றில் பெரும் மரணங்களைக் கொடுத்த தொற்றுநோய். உலகின் மூன்றில் ஒரு பங்கு மக்கள்தொகையை, புவியைவிட்டு நகர்த்திய நுண்ணுயிரி. `கறுப்புக் கொலை’ (Black Murder) எனப் பெயரிடப்பட்ட அந்தப் பெருந்துயர் பற்றி, இப்போது நம்மில் பலருக்குத் தெரியாது. அதை நிகழ்த்திய பிளேக் நோயை, இன்று கூகுளில்தான் தேடித் தெரிந்துகொள்ள வேண்டும்.
மனித அறிவு, பிளேக் நோயை ஓரமாக ஒடுங்கவைத்துவிட்டது. `வெறிகொண்ட வேட்டை நாயை சிறு பிஸ்கட்டுக்கு வால் ஆட்டும் வீட்டு நாயாக மாற்றிய மனிதன், இப்போது கட்டுக் கடங்காது உயரும் நீரிழிவு நோயையும், இன்னும் சில ஆண்டுகளில் காலையில் எழுந்து பல் துலக்கி வாய் கொப்பளிப்பது போல், சில சின்ன அக்கறைகள் மூலம் அடக்கி ஆளும் வாய்ப்பும் சீக்கிரம் வரும்' என்கின்றன சமீபத்திய ஆய்வுகள்.
இனி `எத்தே... ஒரு மானிப்பிடி அரிசிக்கு எவ்வளவு தண்ணீர் ஊத்தணும்?' எனக் கேட்பது போல, `நாலு மைசூர்பாகு சாப்பிட்டிருக்காக, அப்படின்னா இன்சுலின் இந்த அளவு செட் பண்ணிக்கலாமா?' எனக் கேட்கும் காலம் வரலாம். உடம்பில் செருகப்படும் சிம் கார்டில் இன்சுலினை `டாப்அப்’ பண்ணும் மருத்துவத் தொழில்நுட்பம் வரும் தூரம் வெகுதொலைவில் இல்லை.
காலம் காலமாக மனிதனின் மருத்துவ அறிவுக்கு மண்டியிட்ட நோய்கள்போல, புற்றுநோயையும் ஒடுக்கி ஓரங்கட்டிட மருத்துவ உலகில் நடக்கும் ஆராய்ச்சிகள் ஏராளம். `நுண்ணிய மைட்டோகாண்டிரியாவை என்ன செய்யலாம், சேட்டை செய்யும் செல் நொதியைப் பிடித்துவைக்க எதை அனுப்பலாம்?’ என நானோ நுட்பமாக, ஆய்ந்து ஆய்ந்து மாய்ந்துபோன விஞ்ஞானிகள், கடைசியில் `கருங் குளம் சுப்பிரமணிக்கு இது எப்படி வேலைசெய்யும், அதுவே லண்டன் மார்ட்டினாவுக்கும் பொருந்தி வருமா?’ என விரித்து யோசிக்க ஆரம்பித்துவிட்டனர். இப்படியாக விசாலமாக விரித்து ஆராயும் ஆய்வுக்கு System Biology எனப் பெயர். உடலைக் கூறுபோட்டு, இம்மி இம்மியாக ஆராய்ந்து, எலி - பூனை - குரங்கு என ஏகத்துக்கு காலி பண்ணியதை நிறுத்திவிட்டு, `அது வேறு... உருவாய், அருவாய் என உரு(க்)கி யோசிக்கும் உணர்வும், பீப் பாட்டு பாடும் பொறுக்கி மனசும்கொண்ட அஞ்சரை அடி ஆறு அங்குலத்தில் இருக்கும் மனிதன் வேறு...’ என உணர ஆரம் பித்துவிட்டனர். ஒட்டு மொத்தமாக (Modren Holism) வியாதி உடலை ஆளும்போக்கை இந்த System Biology செய்ய ஆரம்பித்துள்ளது. இதே ஒருமித்தப் புரிதலைத்தான் சித்தமும் ஆயுர்வேதமும் அக்குபஞ்சரும் இன்னபிற உலகின் பல பாரம்பர்ய மருத்துவங்களும் அவரவர் நாட்டுத் தாய்மொழியில், இத்தனை நாட்கள் பேசிவந்தன. இன்னும் கொஞ்சம் எளிதாகச் சொன்னால், `இஞ்சியின் ஒரு மருத்துவ மூலக்கூறை (Ginger fractional extract) ஒற்றைத் தலைவலிக்குப் (migrane) பயன் படுத்தும்போது, தலைப் பகுதி ரத்த நாளங்கள் விரிவடை கின்றனவா?’ என ஆராய்ந்து `ஆமாம்’ என்றது நேற்றைய நவீனம். `சுப்பிரமணிக்குப் பித்தம்பா... இஞ்சி தட்டிக்கொடு’ என்ற நேற்றைய செய்தியை மொத்தமாக ஆராய்ந்து ஆமோதிக் கிறது System Biology எனும் நாளைய நவீனம்.
இப்படியான System Biology அணுகுமுறையில் உணவு ஒரு முக்கிய விஷயம். `சாப்பிட என்ன கொடுக்கலாம் டாக்டர்?’ எனக் கேட்கும் ஒரு தீவிரப் புற்றுநோயாளிக்கு, ஒரு ஸ்பூன் புரதக் கலவையை சில நூறு ரூபாய்களுக்கு பரிந்துரைக்கும் நம் மருத்துவ `துரை’க்கு, பல பாரம்பர்ய உணவு வகைகள் புற்றின் தீவிர வளர்ச்சியைக் கட்டுப் படுத்தும் எனத் தெரியாது. நம் நாட்டின் ஒரு கடைக்கோடியில் உள்ள அசாம், மணிப்பூரில் உள்ள கறுப்பு அரிசி ரகம், புற்றின் வளர்ச்சியைத் தாமதப்படுத்தும் அனைத்துப் பண்புகளையும் பெற்றிருப்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது. `Chak-Hao’ என அவர்கள் மொழியில் அழைக்கப்படும் அந்த அரிசி, ஒரு காலத்தில் சீனப் பேரரசர்களின் அரண்மனையில் மட்டுமே வடிக்கப்படும் அரிசி. `அப்படி என்ன அதில் இருக்கிறது?’ என ஆய்ந்த தற்கால விஞ்ஞானம்... வைட்டமின்-பி , நியாசின், கால்சியம், மக்னீசியம், இரும்பு, நார்ச் சத்துக்கள் நாம் அன்றாடம் பயன் படுத்தும் வெள்ளை அரிசியில் இருப்பதைவிட அதிகம் இருப்பதாகத்தான் முதலில் சொன்னார்கள். ஆனால் இப்போது, அந்த அரிசியை ஆராய்ந்த சீன விஞ்ஞானிகள் லீ பிங் லியோ குழுவினர், இந்தக் கறுப்பு அரிசியில் கருமை நிறத்தைத் தரும் ஆந்த்தோசயனின்கள் எல்லாம் வழக்கம்போல் `வெறும் ஆன்ட்டிஆக்ஸிடன்ட்கள் மட்டும் அல்ல; நச்சு அகற்றி நொதிகளும்கூட’ என முதலில் அறிந்தது. கூடவே பெண்களின் மார்பகப் புற்று வளர்ச்சியைக் கட்டுப்படுத்து வதையும், புற்றுச்செல்களை வளர ரத்தம் அனுப்பும் நாடிகளைத் தடைசெய்யும் Angiogenesis தன்மையும், Apoptosis எனும் செல்களின் வாழ்நாளைத் தீர்மானித்து நெறிப்படுத்தும் செய்கையும் பாதுகாப்பதைப் பார்த்து வியந்து நிற்கின்றனர். இவர்களது ஆய்வு முடிவுகள், Asia Pacific Journal of Cancer Prevention-2014 நூலில் வெளியாகியுள்ளது.
தேவகந்தா எனும் மணிப்பூர் விவசாயி, `இதேபோல் 100 வகை கறுப்பு அரிசிகள் எங்கள் ஊரில் உள்ளன. `சக்கோபோரேய்தான்’ எனும் கறுப்பு அரிசி, எங்கள் ஊர் பாரம்பர்யத்தில் பிரபலம்’ என `டவுன் டு எர்த்’ பத்திரிகையில் பேசியிருக்கிறார். தமிழ்நாட்டின் முன்னோடி பாரம்பர்ய நெல்களின் பாதுகாவலர் நெல் ஜெயராமன், நம் ஊரின் பல கறுப்பு அரிசி ரகங்கள் பற்றி அடிக்கடி பேசுபவர். அவர் சொல்லும் கருங்குறுவை, கறுப்பு நிற சம்பாக்கள் எல்லாம் இப்படியான மருத்துவ நிறம் உள்ள நிறமிச் சத்துக்களைக்கொண்டவைதான். சீனாக்காரன் யோசித்ததுபோல் நம் ஊர் வேளாண் விஞ்ஞானிகள் கூட்டமும் மருத்துவ ஆய்வாளர்களும் எப்போது இதை நுணுக்கமாக ஆராயப்போகிறார்கள்? ஏனென்றால், கறுப்புச் சட்டையைக் கழற்றிவைத்துவிட்டு, தலைவர் படத்தை சட்டைப்பையில் வைத்துத் திரியும் வெள்ளை வெளேர் வெத்துவேட்டுக்களைப் போல, அரிசி, உளுந்தில் இருந்து பயன் தரும் கறுப்புத் தொலியைக் கழற்றி எறிந்து, வெத்துவேட்டுக்கள் ஆக்கிவைத்திருப்பதுகூட `உயிர் பிழை’ உருவாக முக்கியக் காரணம் என்பதை, நாம் மறக்கக் கூடாது.
ஏரியில் இருந்து தாங்கலை நோக்கி தண்ணீர் வருவது 15,000 வருடப் பழக்கம். அந்த மரபை நாம் மறந்தாலும் மழை மறக்க வில்லை; மறக்கவும் செய்யாது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அடையாறின் வழி ஈக்காட்டுத் `தாங்கலுக்குள்’ வந்து, நம்மை குமுறி ஓடவைத்த ஆற்று நீரும் அப்படி மரபுவழிப் பயணத்தில் வந்ததுதான். மழைநீரைப்போல் மரபை மறக்காத குரோமோ சோம்கள், நம் உடலில் மில்லியன் வருடங்களாகக் குத்தவைத்துக் காத்திருக்கின்றன. அவற்றுக்கு எல்லாம், கறுப்பு அரிசிதான் தெரியும். செக்கு எண்ணெய் வாசம்தான் பழக்கம். வேப்பம் பிண்ணாக்குப் போட்டு வளர்த்த கத்திரிச் செடிதான் பரிச்சயம். தோல் உரித்த அரிசியும், ரசாயனத்தில் விளைந்த கத்திரியும், அமிலம் பிழிந்த எண்ணெயும், கூடுதலாக எக்கச்சகக்க வேதிக் கூட்டணியுடன் வேகவேகமாக வரும்போது மட்டுமே உடம்புக்குள் சில நேரம் சின்னப் பிழைகளும், சில நேரம் உயிரைத் தாக்கும் விளைவுகளும் உருவாகின்றன.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில், தேசிய உயிரியல் மாநாடு கடந்த வாரம் நடந்தது. அந்த மாநாட்டின் விஞ்ஞானிகளுக்கான ஓர் அமர்வின் தொடக்க உரையை ஆற்றினார், தமிழ்நாட்டின் மூத்த நுண்ணுயிரியல் விஞ்ஞானி பேராசிரியர் தியாகராசன். அவர் 30 வருடங்களாக கீழாநெல்லி மூலிகையை மட்டும் ஆய்வு செய்தவர். 25-க்கும் மேற்பட்ட மிக நுண்ணிய மூலக்கூறுகளை, அந்தச் செடியில் இருந்து பிரித்தெடுத்து, உலகத் தரத்தில் ஆராய்ந்தவர். அந்த ஆராய்ச்சியில் 25 முனைவர் மாணவர்களை உருவாக்கியவர். அவர் உரையில் கடைசியாகக் குறிப்பிட்ட விஷயம் இதுதான்... `கீழாநெல்லி மூலிகையில் இருந்து 27 விதமான கூறுகளைப் பிரித்தெடுத்து எந்தக் கூறு ஹெப்படடீஸ் பி எதிர்ப்புக்குப் பயன்படும் என ஆராய்ந்தேன். தனித்தனியாக எந்தக் கூறும் பெரிதாகப் பயன் அளிக்கவில்லை. ஆனால் மொத்த கீழாநெல்லிச் செடி, அந்த வைரஸையும் அழித்து ஈரலைக் காக்கிறது; ஈரல் புற்று வருவதைத் தடுக்கிறது’ என்றார். பிரித்துப் பிரித்து நுண்ணியச் செயலியைத் தேடுவதைவிட மொத்தமாகப் பாருங்கள். நுண்ணியச் செயல்கூறுகளைத் தேடும் ஆய்வில், ஒரு மருந்து உருவாக இரண்டு பில்லியன் யூரோவும் 20 வருடங்களும் வீணாகின்றன. மொத்தமாக, விசாலமாகச் சிந்தித்தால் இந்தப் பணத்தில்... நேரத்தில், 75 சதவிகிதத்தைத் தவிர்க்க முடியும். அதற்கான தொடக்கம் மரபில் இருந்து, ஆரம்பிக்கட்டும்’ என அத்தனை ஆய்வறிஞர்களையும் பார்த்து அழைப்புவிடுத்தார். மிக முக்கியமான, பெரும் அறிவும் அனுபவமும் கொண்ட சிந்தனையில் இருந்து பிறந்த அறைகூவல் இது. எத்தனை ஆய்வாளர்கள் காதுகளை எட்டப்போகிறது?