Articles

14 Feb

ஜப்பான் பயணிக்கச் சரியான மாதம் இதுவல்ல

ஜப்பான் பயணிக்கச் சரியான மாதம் இதுவல்ல. கொஞ்சம் கூடுதல் குளிரும்! மார்ச் இறுதி முதல் ஏப்ரல் இரண்டாம் வாரம் வரைதான். மொத்த ஜப்பானும் இளஞ்சிவப்பு நிறத்தில் சக்கூரா மலர் சூடி நிற்கும் காலம் இது. அந்த செர்ரி பூக்களின் அழகில், ஜப்பான் பேரழகாய் இருக்கும் பருவம் இது. நான் இந்தமுறை சக்கூராக்களைப் பார்க்க முடியவில்லை.

சாலையெங்கும் உறைபனியில், எல்லா சக்கூரா மரங்களும் தாய்மைக்கு ஏங்கிக் காலண்டர் முன்னால் நிற்கும் தமிழ்ப்பெண்கள் போல் நின்றன.

"டோக்கியோவில் இருந்து, நோஸோமி ரயிலில் ஹிரோஷிமா போறீங்க; வழியில் நகோயா வரை பாலா உடன் வருவார்; ஹிரோஷிமாவில் ஹரி சந்தியா உங்களைப் பாத்துப்பாங்க; அங்கிருந்து ஷின் ஒசாகாவுக்கு புல்லட் ரயில்; ஒசாகாவில் இருந்து நாரா கியோட்டாவுக்கு மணி தன் காரில் கூட்டிச்செல்வார். ஷின் ஒசாகாவில் இருந்து கான்சாய்க்கு ஹகூரா எக்ஸ்பிரஸ்", என என்னிடம் சதீஷ் போனில் சொன்னபோது, பழைய புரூஸ்லீ படத்துல பேசிகிட்ட மாதிரித்தான் இருந்தது. ஆனால் ஒவ்வாரு வினாடியையும் துல்லியமாய்த் திட்டமிட்டுக் கொடுத்திருந்தார்கள், அங்கிருந்த தமிழ் நண்பர்கள். இந்தியாவிலிருந்து கிளம்பும் முன்னரே, இங்கு ஓடும் அத்தனை இரயிலிலும் செல்லுபடியாகும், JRPASS வாங்கிவருவது உசிதம். நான் அதைச் செய்திருந்தேன்.

நேற்றைய ஹிரோஷிமா பயணம், என்னைப் பெரிதும் உலுக்கியிருந்தது. கரித்துண்டுகளால் நிரம்பியிருந்த அந்த சாப்பாடு டப்பா மனசை என்னமோ செய்துகொண்டே இருந்தது. ஜப்பான் தன் அணு உலைகளையும் மெல்ல மெல்ல மூடிவருகிறது. 30% அணுசக்தி மின்சாரம் என்ற நிலையை, 22% ஆகக் குறைக்கின்றனர். இங்கு இன்னொரு ஆச்சரியமான விஷயம் ஒன்றிருக்கிறது. எல்லாத்துறையும் மிகக்கச்சிதமாய், முழு நேர்மையுடன் இயங்குவதால், நாட்டை ஆள்பவர்களைப் பற்றி, ஜப்பானிய மக்கள் கவலைப்படுவதே இல்லை போல. அந்த நாட்டின் மொத்த வாக்குப்பதிவு வெறும் 15% தானாம். "யார் ஆண்டாலும், எந்த பிழையும் வராது. எங்கள் உழைப்பு நேர்மை அப்படி", என்கிறார்கள். நாம் எப்போது அப்படி ஆகப்போகிறோம்?

சின் ஒசாகாவில் காலையில் கிளம்பி நாங்கள் சென்றது நாரா பகுதிக்கு. நாராவின் மாபெரும் பழம் புத்த கோயில், அதை ஒட்டி ஏராளமாய்த் திரியும் ஜப்பானிய மான்கள் நாம் பார்க்க வேண்டிய முக்கியமான இடம். பலமுறை சிதைவுபட்ட இந்த ஆலயத்தை மறுபடி மீட்டுருவாக்கம் செய்துள்ளனர். முழுதும் மரத்தினாலான இந்த கோயிலில் பிரமாண்டமான புத்தர் அவரைச் சுற்றி 11 போதிசத்துவர்களைப் பார்க்க முடியும்.

அடுத்து கியோட்டோ. ஜப்பான் என்றவுடன் நம் கண்முன்னே தெரியும் அழகிய 5 அடுக்கு 7 அடுக்கு பகோடா கோயில்கள் நிறைந்த பகுதி கியோட்டோவில்தான் உள்ளன. பார்க்கும் இடமெல்லாம், கியானோ எனும் இந்த நாட்டுப் பாரம்பரிய உடை அணிந்து, அழகிய ஜப்பானியப் பெண்கள். கிட்டத்தட்ட 1600 கோயில்கள் இந்த கியோட்டாவில் மட்டும் உள்ளன. கோயில் அல்லாது, இங்குள்ள தெருக்களின் வீடுகள் கூட,அழகிய மரவேலைப்பாடுகளுடன் பேரழகாய் நிற்கின்றது. எல்லா ஊரிலும் கோயில்வாசல் தெருக்கள் தனி அழகு. அம்மா இடுப்பில் இருந்துகொண்டு நெல்லையப்பர் கோயில் முன் இருக்கும் குட்டியூண்டு கோயில்வாசல் மண்டபக் கடையில் வாங்கிய ஊதாகலர் பிளாஸ்டிக் பொம்மை, இன்றைய பார்பி டால்களைவிட பெரும் கவிதைகள் சொன்னவை. கியோட்டோ கோயில் வாசல் தெருக்கள் முழுக்க இருபக்கமும் அப்படியான பல கடைகள். இச்சாலையில், அழகழகான ஜப்பானை நினைவூட்டும் குட்டியூண்டு கலைப்பொருட்கள் வாங்கலாம். விதவிதமான டம்ப்ளிங், டேங்கோ மோச்சி சாப்பிட்டுக்கொண்டே நடக்கலாம். நடந்தோம்

ஜப்பானிய உணவில் ஆரோக்கியக் கூறுகள் கொட்டிக்கிடக்கின்றன. இங்குள்ள 'ஒகினோவா' தீவில்தான் உலகின் பெரும் வயதானோர் கூட்டம் நிறைந்து கிடக்கின்றது. அவர்களின் சராசரி ஆயுட்காலம் 103. என்னப்பா ரகசியம்? என கேட்டால் , secret of blue zone documentary ( Netflix இல் உள்ளது ; ஆர்வமுள்ளோர் கட்டாயம் பாருங்கள்) யில் அந்த ஊர் பாட்டி "என் அழகிற்கும் ஆரோக்கியத்திற்கும், கரு நீலதோலுடைய சர்க்கரைவள்ளிக்கிழங்கு கிழங்கு, பசிபிக் மீன் கூடவே இந்தக்கடல் பழம்பாசி சாப்பிடணும். ஆனால் 80% வயிறுக்குத்தான் சாப்பிடணும். கூடவே இகிகாய் வாழ்வியல் வாழ வேண்டும். கொஞ்சமேனும் விவசாயம் செய்யணும். " என்கிறார்கள்.

இங்குள்ள மக்கள் சோயாவில் விதவிதமான உணவைச் சாப்பிடுகின்றனர். நம் ஊர் நீராகாரம் மாதிரி புளிக்க வைத்த நத்தோ, சோயா கஞ்சி, சிகப்பு பயறு சோயா சேர்த்து சாப்பிடும் அவர்கள் உணவில் புரதம் சற்றே கூடுதல். எல்லாவற்றுடனும் ஒச்சோ குடிக்கின்றனர். 'ஒச்சோ' என்றால் சூடான கிரீன் டீ.( நம்மைப் போல், டீத்தூளில் தேநீர் பால்பாயசம் செய்து டீ என பெயர் வச்சுக் குடிப்பதில்லை) . 100% பால் சேர்க்காத, சர்க்கரை போடாத பச்சைத் தேநீர். இஞ்சிச்சாறில் பன்றிக்கறி (கோகோ கறி என அழைக்கின்றனர்), பனியாரத்துக்குள் ஆக்டோபஸ் என புலால் இன்றி இவர்கள் உணவில்லை. காய்கறி சாலடில், மேலூற்றும் எள் சாஸ் இனிப்பாய் உள்ளது. இங்கு ஆகச்சிறப்பாகப் பரிமாறப்படும் "மிசோ சூப்" பல பக்குவங்களில் தயாரிக்கப்படுகிறது. சோயாவில் செய்யும் மிஸோ சூப் உடலுக்கு எத்தனை நல்லது என பல ஆய்வுகள். நம் உணவில் இப்பக்குவங்களை நாமும் யோசிக்க வேண்டும். முக்கியமாய் நான் கவனித்ததில், அவர்கள் உணவில் அதிகம் prebiotics and probiotics ! மிக கூடுதல் தாவர/புலால் புரதங்கள். பழங்கள் கொஞ்சம் குறைவாகவே தென்படுகிறது. 'வாழைப்பழம் வாங்கணும்' என்றாலும், படகேறிப் பக்கத்துல பிலிப்பைன்ஸ் போகணும் போல.

ஜப்பான் பெரும் தீவுக்கூட்டம். கிழக்காசியாவின் கிழக்கு ஓரம். மேலிருந்து கீழாக 4 பெரும் தீவுகளும், கூடவே ஆயிரக்கணக்கான குட்டிக்குட்டி தீவுகளைப் பசிபிக் பெருங்கடலில் கொண்ட archipelago இது. நான்கு நாளில், இந்த மொத்த தீவின் அற்புதங்களை எல்லாம் பார்த்துவருவதெல்லாம் சாத்தியமில்லை. சப்பான் தமிழ் நண்பர்களால் எனக்கு சாத்தியமாயிற்று

தமிழகம் தொடர்ந்து கடந்து நூறு ஆண்டுகளாய், ஒடுக்கப்பட்ட முடங்கிகிடந்த விளிம்பு நிலையிலிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்குச் சோறூட்டித், தோள் கொடுத்து, குறிப்பாய்ப் பள்ளி கல்லூரியில் இடம்கொடுத்து படிக்க வைத்த, சமூக எழுச்சிதான், இன்று ஜப்பான் மட்டுமல்ல பல்வேறு நாடுகளில், உயர்பதவிகளில், நம் பட்டிதொட்டியில் இருந்தோரை உச்சத்தில் உட்காரவைத்துள்ளது. இந்த வருடம் இந்தியாவில் தமிழகத்தில் 2211 பள்ளிகள் நூறு ஆண்டுகளைத் இந்த தாண்டுகின்றதாம். பெரும்பாலும் அரசுப்பள்ளிகள்!. பெரும்பாலும் அப்படியான பள்ளிகளில் படித்து, விளிம்பு நிலையில் இருந்து, இங்கு பறந்துவந்த சதீஷ், அருள், செந்தமிழன், பாலா,அபிஷேக், செகன், பூவேந்தன்,ஜெயக்ககுமார், பிரபு, பார்த்திபன், மணி, சந்தியா, பாலா, செந்தில் கமலக்கண்ணன் என ஒரு பெரும் அன்புக்கூட்டணிதான் எனக்கு ஜப்பானில் ஊர்சுற்றிக் காட்டியது. தமிழாலும் தினையாலும் சேர்ந்து அரவணைத்த கூட்டம் இது. ஐந்து நாட்களும் அழகிய நினைவுகளை அள்ளி நிரப்பிக்கொண்ட என்னைச் சுமந்து கொண்டு, கான்சாய் விமான நிலையத்தில் இருந்து, மலேஷியன் ஏர்லைன்ஸ் வானத்துக்கு ஏறியது. எவ்வளவு பறந்தாலும், இறக்கைகளை விமானங்கள் எப்போதும் சுருக்கிக் கொள்வதில்லை. அவைதான் விண்ணில் பறக்க அதற்கான இயந்திரங்கள். எனக்கும்தான்!

(பிறிதொரு பயணத்தில் சந்திப்போம்! நிறைவு)

Telephone Call Icon +91 7299045880 Book Appointment
whatsapp