டோக்கியோவில் நான் முதலில் பார்க்க விரும்பியது சுமிதா ஆறு. எல்லா நாட்டிலும் “ஆறு பார்த்தல்" எப்போதும் என் முதல் கனா. இப்போதும் கொக்கிரகுளம் ஆத்துப்பாலத்தில் இருந்து சிலாகித்து நின்றால், என் தமிழாசிரியன் மீசேகிரகோரியின் மிடுக்கு குரல் காதுக்குள் ஓங்காரமிடும். படித்துறையில் நின்று பொருநையில்
கால் நினைத்து நிற்கையில், வண்ணதாசன் வந்து கைபற்றி, "தேக்கும் பூக்கும்" சொல்லிக் கட்டியணைப்பார். மருதவனம் வழிச் சென்று, பொதிகையைப்பார்த்துக் கொண்டே மணிக்கணக்கில் கல்லிடைக்குறிச்சியின் தாமிரவருணியில் நீராடும்போது, தேவதேவன் "கட்டிப்பிடிக்க முடியாது; ஒரு காபி சாப்பிடலாம் வா" என்ற அவரின் ஆகச்சிறந்த கவிதை சொல்லி முன்னாள் காதலியை நினைவூட்டுவார். ஆறு பார்த்தல் என்பது முன்னாள் காதலி பார்த்தல் மாதிரி.
ஆறு நல்ல இரத்தம், கெட்ட இரத்தம், நிண நீர் என இவற்றோடு நம் உடலில் ஓடும் இன்னொரு நதி. உலகெங்குமே பல குளிக்க இயலாத ஆறுகள்தாம். ஆற்றங்கரைகள் அனேகமாக தென்படாத பிரான்சின் சியானாவும், சுவிஸ் நாட்டின் ரேன் நதியும், கனடாவின் அட்டாவா ஆறும், லண்டன் தேம்ஸும் எல்லாப் பயணத்திலும் நான் பார்த்த நான் தேடும் கவி மடிகள்.
தோக்கியோவைச் சுற்றி ஓடும் ஆறு சுமிதா. இவளை உலகெங்கும் அறிமுகம் செய்தது பாஷோ எனும் ஹைக்கூ கவிஞன். ஜப்பானிய இருவரி நான்கு சொல் ஹைக்கூக்களின் அரசன் பாஷோ. கரையோரத்தில் நடக்கையில், மட்ஷோ பாஷோவின் "பழைய குட்டை; தவளை குதித்தது ; நீரின் ஒலி" கேட்டது. உலகில் அதிகம் விவாதிக்கப்பட்ட கவியில் இதுவும் ஒன்று. 27 கிமீட்டர் ஓடும் சுமிதாவின் குறுக்கே 26 பாலங்கள். இந்த பாலம் வழி நடந்து பின்புறம் sky tree தெரிய புகைப்படம் எடுப்பது டோக்கியோ சம்பிரதாயம். வழியில் இரண்டு ஜப்பானிய இளம் பெண்கள் அவர்களின் பாரம்பரிய "கிமோனா" உடையில் படம் எடுக்க, அவர்கள் உடையில் நானும் உடன் நின்று படம் எடுக்க, நண்பர் கேட்டதும், நதியோடு சேர்ந்து நானும் வெட்கித்து சிலாகித்தோம். அவர்கள் பெருமிதமாய் "நீங்கள் இந்தியாவா?" என ஜப்பானில் கேட்டார்கள். நானும் பாதி பாதஹஸ்தாசனம் செய்து "அரிகோதோ கொஸாய்மாஸு" மட்டும் சொல்லி படம் எடுத்துக்கொண்டேன். இந்த வயசில் அது மட்டும் தானே சொல்ல முடியும்? ( அது யாரு போட்டோல?...யாரோ சதீஷ், பாலா, முத்துன்னு பேர் தான் கூட வாரீங்கன்னு சொன்னீங்க?..என எங்க வீட்டு உளவுத்துறை விசாரித்தது தனிக்கதை)
அன்று இரவு sky tree இல் 450 மீட்டர் உயரத்தை 20 வினாடிகளில் துளிச்சலனமின்றி ஏறும் லிப்டில் பயணித்து ஏறி, மொத்த டோக்கியோவை 360 டிகிரியில் பார்த்தோம். வானத்தை தரையில் பார்ப்பது போல மொத்த நட்சத்திரங்களும் பால்வெளியில் இருந்து நிலத்தில் விழுந்து கிடப்பதைப் போன்ற ஆகச்சிறந்த காட்சி. வண்ண வண்ண விளக்குகளால் டோக்கியோ மிளிர்வதை மேலிருந்து ரசிக்கலாம். "20 வருசத்துல ஒரு நாள் கூட இங்கே கரண்ட் போகலை", என்றார் உடன் வந்த வினோத்.
வந்ததில் இருந்தே சீரோ முதல் ஒரு டிகிரியில் தான் டோக்கியோ. சூரிய வெளிச்சம் பளிச்சென இருந்தாலும் குளிர் ஆட்டத்தான் செய்கிறது. மேலே கீழே என மொத்தமாய் தெர்மல்ஆடை, அதுக்கு மேலே ஜீன்ஸ், அப்புறமா குளிர் ஆடை பத்தாதற்கு 5கிலோவில் குளிர்தாங்கும் பாதரட்சகை என போட்டு நகர்வதால், குளிர் நம்மோடு கோவிப்பதில்லை. இங்க சிறப்பான "ஓச்சோ" கிரீன் டீயை தண்ணீர் மாதிரி குடிக்கையில், 'உச்ச்சா' வரும் போது, அவசரத்துக்குப் போக முடியாது. "நினைவோ ஒரு பறவை" கமல் பாட்டில், கதவு கதவாகத் திறந்து, ஶ்ரீதேவியப் பார்க்க வர்ற மாதிரி, எல்லாத்தையும் ஒண்ணொன்னா கழட்டி, 'அவசர உச்சா' போவதற்குக் கொஞ்சம் மனத்திடம் அவசியம் சகோ. ஆனால் ஸ்கை ட்ரீயில் 450 மீட்டர் உயரத்திலும், மிக அழகியச் சுத்தமான கழிவறை 'கப்' அடிக்காமல் இருக்கின்றது. அவர்கள் எப்படிச் சுத்தமாக வைக்கிறார்கள்? என்பதைப் போன வருடம் வந்த perfect days ஜப்பானியப்படம் பாருங்கள் புரியும்( எனது ஆஸ்திரேலியப் பயணக்கட்டுரையில் அப்படத்தின் தத்துவார்த்த அற்புதத்தை கிறங்கி எழுதியுள்ளேன்.முக நூலில் வாசிக்கலாம்)
டோக்கியோவின் அழகிய கோயில் அசகுசாவில் உள்ள சென் ஷி ஆலயம். தலை நகரில் உள்ள போதி சத்துவருக்கான ஆலயம். திருச்செந்தூர் கதை மாதிரியே, சுமிதா ஆற்றங்கரையில் இந்த புத்தரின் சிலை யாரோ மீனவருக்குக் கிடைத்ததாக வரலாறு சொல்கிறது. 650 இல் கட்டப்பட்ட ஆலயம் இது. கோயில் வரும்ஜப்பானியப் பக்தர்கள் கிமோனா உடை அணிந்து வருகின்றனர். நாம் ஜீன்ஸ் உடன் முடியும். பத்தி ஏற்றுகின்றனர். கூட்டம் கூட்டமாக சாமி வேண்டி fortune ஜோசியம் பார்க்கின்றனர். நல்ல சேதி வந்தால் வீட்டுக்கு கொண்டு போகின்றனர். கெட்ட சேதியை அங்கேயே கம்பியில் கட்டுகின்றனர்.
அசகுசாவுக்கு அடுத்து வெளி நாட்டவர் மொய்க்கும் இன்னொரு இடம் அக்கிஹபாரா. அடுத்த நூற்றாண்டின் அனைத்து எலக்ட்ரானிக் தட்டுமுட்டுச் சாமான்களை வாங்கும் இடம் இது. சின்ன பேட்டரியில் இருந்து ரோபோட்டுக்கள் வரை சகாயவிலையில் விற்கின்றனர். "ஹோம் தியேட்ர்லாம் வேண்டாம்" இந்த கண்ணாடி போட்டு படம் பாருங்க Xreal air2 கண்ணாடி ஏகமாய் விற்கிறது. இந்த கண்ணாடியைப் போட்டு சோனி 60இஞ்ச் திரையில் பார்ப்பதை ராஜபார்வை கமல் மாதிரி கண்ணாடி மட்டும்போட்டு பார்க்கலாம். காதருகே உள்ள புளூடூத்தில் ராஜா பாடுவார் . விழித்திரையில் தமன்னா ஆடுவார். virtual reality யாம். நம் ஊர் காசுக்கு 25,000 ரூபாய்க்கு வாங்க முடியும். நாம் ரத்னா தியேட்டரில் விசலடிச்சு முருக்கு சாப்பிட்டு தங்கமகன் பார்த்த தலைமுறை. அரிகோதோ சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டேன்.
அடுத்த நாள் அதிகாலை மவுண்ட் ஃப்யூஜி, ஜப்பானின் உயர்ந்த மலைச்சிகரம். 3700 மீட்டர் உயரம். பவுத்தர்களின் கைலாச மலை இது. கோடைக்கலத்தில் பலரும் இங்கே மலையேற்றம் செய்கின்றனர். நாம் எதிர் குன்றில் ஏறி நின்று ரசிக்கலாம். டோக்கியோவில் இருந்து 100-120 கிமீ தொலைவில் உள்ள இந்த மலை உச்சிக்கு பவுத்தர்கள் வாழ்வில் ஒரு நாளாவது ஏறுவதை மத ஒழுக்கமாகக் கொண்டுள்ளனர். மலையைச்சுற்றி ஏரிகளும் நன்னீர் புனித ஊற்றுக்களும் உள்ளனர். நம் ஊர் மாதிரியே ஊற்றில் காசுக்களைப் போட்டு கும்பிடுகின்றனர். நான் பார்க்கையில் எவனோ ஒருத்தன் அதில் ஐபோன் 16 ஐ போட்டிருந்தான். ஊற்றைச் சுற்றி “மோச்சி டம்ப்ளிங்க்ஸ் டாங்கோ” எல்லாம் விக்கிறார்கள். நம் ஊர் பனியாரம் மோதகம் வகையறாக்கள்தான் அது. ஜப்பானிய மூலிகை மக்வர்ட் போட்டு மோதகம் சுட்டுத்தந்தார்கள். ரசித்துச் சாப்பிட்டேன். அவ்ளோ சுவை. அடுத்த கடையில் "அக்டோபஸ் சுஷி", "சுட்ட ஸ்க்விட்" விற்பனை களைகட்டி இருந்தது. நாம் ஜேம்ஸ்பாண்ட் படத்துல பார்த்த ஆக்டோபஸ் இல்லை அது. இது பனியாரத்துக்குள் வேகவைக்கும் அளவு குட்டியூண்டு.
தொன்மையும் தொழில் நுட்பமும் உச்சத்தில் உள்ள நாடு ஜப்பான். நம்மைப்போலவே இந்நாட்டு பூர்வ குடி மக்கள் இயற்கையை வழிபட்டவர்கள். இயற்கையை ஏகத்துக்கும் நேசித்தவர்கள். இயற்கைக்கு பெரிதும் பயந்து தொழுதவர்கள் . ஷிண்தோ அவர்களது பூர்வ குடி மதம். ஷிண்தோ என்றால் "கடவுளின் வழி" என்று பொருள். பின் மெல்ல மெல்ல பவுத்தம் இங்கே நுழைந்து இப்போது பெரும்பாலவனர்கள் பவுத்தர்கள். கொஞ்சம் கிறித்துவர்களும் உண்டு.
கடும் மரபுப்பிடிப்பு உள்ள, நிறைய பழமைவாத(சில மூட) நம்பிக்கைகளையும் கொண்ட இவர்களிடையே மதம் குறித்த, சாதி குறித்த உரையாடலே 1960 களுக்குப் பின்னர் இல்லை. நான் எம்மதவும் சாராதவன் என பதிந்து கொள்ளும் உரிமை உண்டு. 100 % காதல் திருமணம்தான். சாதி என்று ஒன்று இல்லை. வரலாற்றில் ஒடுக்கப்பட்டிருந்த ஒரு குழு, 1960 களுக்குப் பின் முழுமையாய் கலக்கப்பட்டு உயர்த்தப்பட்டு எவ்வித சாதீய அடையாளமும் இல்லாமல் இருக்கின்றது ஜப்பானிய சமூகம்.
1945 இல் உடைத்து நொறுக்கப்பட்ட நசுக்கி அழிக்கப்பட்ட ஒரு தேசம் உலகின் உச்சத்திற்கு வந்ததற்கு ஓயாத உழைப்பு, கால ஒழுக்கம், தாண்டி ஒரு தேசமே சாதியற்ற எல்லோரும் சமம் என்கிற நம் ஊர் பாரதி கனாக்கண்ட ஒழுங்கை நனவில் வைத்திருப்பதும் மிக மிக முக்கியக் காரணம். "ஊரு?அப்பா பேரு? ஊர்ல எந்த தெரு?", என நச்சாய்க் கேட்டு, நைசாய்ச் சாதியாய் அறிந்து, கொள்ளும் நச்சுக்குசும்பு இங்கே இல்லை.
மொத்தமும் தேனீக்களாய்ப் பணியாற்றும் கூட்டம் இது. பஸ்ஸைப்பிடிக்க, படிக்கட்டில் ஏற, இரயிலில் நுழைய என எங்கு பார்த்தாலும் வரிசை.முழுசாய் முதுகை வளைத்து 'வணக்கம்'. 45 டிகிரியில் முன் குனிந்து கைகூப்பி 'நன்றி', என சிறியவர் முதல் பெரியோர் வரை எல்லோரும் எல்லாப்பணியிலும் புன்னகையுடன். "அரிகோதோ கொஸாய்மாஸு" - திரும்பிய பக்கமெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. நாளை மணிக்கு 350 கிமீட்டர் வேகத்தில் பறக்கும் தோட்டா தொடரியில் ஹிரோஷிமா நோக்கி...அது என்ன தோட்டா தொடரி?..சப்பானிய தமிழ்ச்சங்க சதீஷின் bullet trainக்கான மொழிபெயர்ப்பு அது..! (பயணிப்போம்)