நான் இன்றுவரை இதை ஒரு பாலபாடம் போல மனதில் வைத்திருக்கிறேன். ஆங்கில மருத்துவத்தில் கைவிடப்பட்ட பலர் இறுதிக்கட்ட முயற்சியாக என்னிடம் வருவார்கள்.
12 ஆண்டுகள் இருக்கும். விதுபாலா எனும் பேராசிரியை. புற்றுநோய் உளவியல் துறையின் தலைவர். ஒரு கருத்தரங்கில் அவர் சொன்ன ஒரு வாசகம் என்னைப் பெரிய அளவில் புரட்டிப் போட்டது. ‘இந்த ஒரு தலைமுறைதான் தன் அடுத்த தலைமுறையின் மரணத்தை அருகில் இருந்து பார்க்கப்போகிற துரதிர்ஷ்டமான தலைமுறை!' தன் விரிவான பேச்சின் ஊடாக அவர் சொன்ன இந்த வாசகத்தைக் கேட்டு எனக்கு உடல் நடுங்கிப்போனது. ‘புற்றுநோய்கள், தொற்றா நோய்களின் தீவிரங்கள் கூடுவதை வைத்துப் பார்க்கும்போது, இன்று 30 வயதிலிருக்கும் நம் அடுத்த தலைமுறை, 40 வயதுக்கு உள்ளாகவே பாதிக்கப்படும் நிலை இருக்கிறது’ என்று புள்ளி விவரங்களோடு அவர் அந்தக் கருத்தரங்கில் பேசினார்.